பேராயர் V.S. அசரியா
1874-1945

அது ஒரு மாபெரும் மிஷனெரி மாநாடு. அலைகடல் என மக்கள் கூட்டம். மான்கள் நீரோடைகளைத் தேடித் தவிப்பது போல, பேராயர் V.S.அசரியாவின் இறை வார்த்தைக்காக மக்கள் ஆவலாய் காத்துக் கொண்டிருந்தனர்.

இறைச் செய்தியின் இனிய நேரம், வேகமாகப் பறக்கும் அம்புகளைப் போல இறை பணியின் அவசியத்தையும், தேவைகளையும் அனைவர் உள்ளத்திலும் பாயச் செய்தார் அசரியா. இறைப் பணியின் வாஞ்சைப் பற்றி எரிந்த போது…

“மிஷனெரிப் பணிக்காக அர்ப்பணிப்போர் உங்களில் எத்தனை பேர்? அவர்கள் முன்னே வரலாம்.” அசரியா அறைகூவல் ஒன்றை விடுத்தார்.

திடீரென்று புயலெனச் சீறி எழுந்தான் ஓர் வாலிபன். “நீங்களே ஏன் ஒரு மிஷனெரியாகச் செல்லக்கூடாது?”

அந்தோ! அசரியாவின் உள்ளம் உடைந்தது. கதறிக் கதறி அழ ஆரம்பித்தார். இயேசுவின் கைகளில் இதயத்தைக் கொடுத்தார். தோர்ணக்கல் என்ற பகுதியில் அவர் தன் கால்களைப் பதித்தார். அது கர்த்தரின் பூமியாகக் கனிந்தது. 8,000 கிறிஸ்தவர்கள் என்ற எண்ணிக்கை 2,26,000 ஆக உயர்ந்தது.

‘மாபெரும் மிஷனெரி,’ ‘மிஷனெரி இயக்கத்தின் விடிவெள்ளி,’ ‘முதல் இந்திய பேராயர்” என்று போற்றப்பட்ட இவர் IMS, NMS, CSI போன்ற மாபெரும் நிறுவனங்கள் உருவாக அடித்தளமிட்டார்.

அஞ்சா நெஞ்சத்துடன் அயராது உழைத்தவர்; கிறிஸ்துவின் உத்தமத் தொண்டன்; கிறிஸ்தவர்களின் வழிகாட்டி: அர்ப்பணிப்பின் மகுடம் என்ற பெரும் புகழுடைய V.S.அசரியா, இதே நாள், ஜனவரி 1ல் 1945ம் ஆண்டு கோதுமை மணியானார்.

வாழ்விலிருந்து வாழ்வுக்கு :
பிறர் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட
அந்தப் பணியை நீங்களே ஏன் செய்யக் கூடாது?

Source: மனிதர்களை தேடிய மாமனிதர்கள் (வீர சுவாமிதாஸ்)


0 Comments

Leave a Reply

Open chat
1
Scan the code
Join our Whatsapp group
Hello 👋
Praise the lord !