–பேராயர் V.S. அசரியா
நான் ஒரு தக்காளி வியாபாரி. சென்னை அயனாவரம் மார்க்கெட் பகுதியில் கடை வைத்துள்ளேன். தினந்தோறும் கொத்தவால் சாவடி சென்று தக்காளி வாங்கி வந்து விற்பது என் வழக்கம்.
அன்று திங்கட்கிழமை (14-8-95) அலுப்பினால் நன்றாக தூங்கியிருந்தேன். கண்விழித்துப் பார்த்தபோது கடிகாரத்தில் சிறிய முள் 5-க்கும் 6-க்கும் நடுவே உட்கார்ந்திருந்தது. பெரியமுள் ஆறில் நின்றிருந்து. பதறியடித்துக்கொண்டு எழுந்தேன். அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிக்கு கொத்தவால் சாவடி சென்றால் தான் சரக்கு கிடைக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால் இப்போதோ மணி ஐந்தரை ஆகியிருந்தது.
காலையில் எழுந்து வேதம் வாசித்து ஜெபிக்கும்முன் எந்தவொரு வேலைக்கும் செல்வது என் வழக்கமல்ல. பிந்தி எழுந்தாலும் அன்றும் வழக்கப்படி என் காலை தியானத்தை முடித்துவிட்டே கிளம்பினேன். அதனால் இப்போது நேரம் நன்றாக விடிந்திருந்தது. என்னுடன் வியாபாரம் செய்யும் நண்பர்களில் பலர் கொத்தவால் சாவடி சென்று காய்கறி வாங்கி விட்டு திரும்பியிருந்தனர். இவ்வளவு பிந்தி செல்லும் என்னைப் பார்த்த ஒருசிலர் உதட்டிற்குள் சிரித்துக்கொண்டனர். இன்னும் சிலர் “வியாபாரம் பண்ணுகிற லட்சணத்தைப்பாரு” என்று உரக்கவே முணுமுணுத்தனர்.
நான் கொத்தவால் சாவடியை அடைந்தபோது வெற்றுக்கூடைகளே என்னை வரவேற்றது. தக்காளி எல்லாம் விற்று தீர்ந்திருந்தது. சோர்வோடு அங்கே ஒரு திண்ணையில் அமர்ந்துவிட்டேன் நான். திடீரென ஒரு லாரி வந்து நின்றது. ஓடிப்போய் எட்டிப்பார்த்தேன். லாரி முழுவதும் நிறைந்திருந்த தக்காளி என்னைப் பார்த்து சிரித்தது.
லாரியில் வந்த நபரும் எனக்கு அறிமுகமானவராகவே இருந்தார். வந்து சேருவதற்கு தாமதமாகிவிட்டது என வருத்தப்பட்டுக்கொண்ட லாரிக்காரர் என்னைப்பார்த்து உங்களுக்கு எவ்வளவு தக்காளி வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள். இன்றைய மார்க்கெட் விலையைவிட பெட்டிக்கு 30 ரூபாய் குறைத்து தருகிறேன் என்று கூறி தேவையான அளவை எடுத்துக்கொடுத்தார். வழக்கத்தைவிட அன்று எனக்கு நல்ல லாபம் கிடைத்தது.
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகள் எல்லாம் கொடுக்கப்படும். மத். 6:33
0 Comments